சேலம் மாநகராட்சியில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

சேலம் மாநகராட்சியில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-16 20:40 GMT

சேலம், 

காலை உணவு வழங்கும் திட்டம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சாப்பிடாமல் வருவதை தவிர்க்கும் வகையில் காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சியில் உள்ள 54 பள்ளிகளில் படிக்கும் 5,719 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா மணக்காடு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

அமைச்சர் பொன்முடி

இதில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தினார். காலை உணவு வழங்கும் திட்டத்தில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு கிச்சடி மற்றும் கேசரிபரிமாறப்பட்டது.

முன்னதாக 54 பள்ளிகளுக்கு காலை உணவு வினியோகம் செய்யும் வாகனத்தை அமைச்சர் பொன்முடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் காலை சிற்றுண்டி தயார் செய்யும் சமையல் கூடத்தை பார்வையிட்டு உணவுகளை சுத்தமாகவும், சுகாதாரமான முறையில் தயார் செய்து மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

நீதிக்கட்சி காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் படிப்படியாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாற்றம் பெற்று வந்திருக்கிறது. காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை சத்துணவு திட்டமாக எம்.ஜி.ஆர். நடத்தினார். அதன்பிறகு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, சத்துணவில் 5 நாட்களுக்கு முட்டையும், முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழமும்வழங்கினார்.

அந்த வகையில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கு ஏற்ப, பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். பள்ளிக்கு காலையில் வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக்கூடாது என்பதற்காக காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திராவிட மாடல் ஆட்சி

இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியிடம் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, இந்துக்கள் குறித்து இழிவாக பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறதே? என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், தற்போது தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி. சாதி, மதம் எதற்கும் இடம் கிடையாது. எல்லா திட்டங்களும் எல்லோருக்கும் கிடைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும் அனைவருக்கும் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. திருமண உதவித்தொகை திட்டமாக இருந்தாலும், மற்ற எந்த திட்டமாக இருந்தாலும் அனைவருக்கும் எல்லாம் சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, முதன்மை கல்வி அலுவலர் முருகன், மண்டலக்குழு தலைவர்கள் உமாராணி, கலையமுதன், கவுன்சிலர்கள் சங்கீதா, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்