வீட்டைஉடைத்து ரூ.2 லட்சம் நகை திருடிய வாலிபர் கைது
சூரங்குடி அருகே வீட்டைஉடைத்து ரூ.2 லட்சம் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சூரங்குடி:
சூரங்குடி அருகே வீட்டை உடைத்து ரூ.2 லட்சம் நகைகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நகைகள் திருட்டு
சூரங்குடி அருகே மேல்மாந்தை பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் முத்துராஜ் (வயது 35). கடந்த 2-ந் தேதி பூட்டப்பட்டு இருந்த இவரது வீட்டு கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்துள்ளார். அங்கு இருந்த பீரோவை உடைத்து, சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்று விட்டார். இதுகுறித்து முத்துராஜ் அளித்த புகாரின் பேரில் சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளவரசு தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
வாலிபர் கைது
இதில், முத்துராஜ் வீடு புகுந்து நகைகளை திருடியவர் சூரங்குடி மேல்மாந்தை பகுதியை சேர்ந்த கண்ணுசாமி மகன் தங்க முனியசாமி (34) என தெரியவந்தது. இதை தொடர்ந்து தங்க முனியசாமியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 6½ பவுன் தங்க நகைகளை சூரங்குடி ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து , வேறு எங்கும் அவர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது ஏற்கெனவே சூரங்குடி போலீஸ் நிலையத்தில் திருட்டு உட்பட 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.