கடலூர் அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குள் புகுந்து காவலாளியை தாக்கி கொள்ளை

கடலூர் அருகே தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்குள் புகுந்து காவலாளியை தாக்கிவிட்டு கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-22 17:44 GMT

சிதம்பரம்,

கடலூர் அடுத்த பெரியக்குப்பத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. செயல்படாத நிலையில் உள்ள இந்த ஆலை வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பெரிய இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் தாமிர கம்பிகள் வைக்கப்பட்டு உள்ளது.

இதனால் அங்கு 30-க்கும் மேற்பட்ட காவலாளிகள் சுழற்சி முறையில் பணியாற்றி பாதுகாத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த தொழிற்சாலைக்குள் இருக்கும் பொருட்களை கொள்ளையர்கள் இரவு பகல் பாராமல் பல்வேறு இடங்கள் வழியாக உள்ளே புகுந்து கொள்ளை அடித்து வந்தனர்.

மேலும் கடந்த 10-ந்தேதி நள்ளிரவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றபோது, திடீரென போலீசார் மீது அவர்கள் பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசிவிட்டு தப்பி ஓடினர். இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை புதுச்சத்திரம் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

கத்தியால் தாக்கி...

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று அதிகாலையில் கொள்ளையர்கள் சிலர் தொழிற்சாலைக்குள் திடீரென புகுந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அங்குள்ள இரும்பு தளவாட பொருட்களை கொள்ளையடித்து கார் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதைபார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியான தியாகவல்லி நொச்சிக்காடு பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் மணிகண்டன்(வயது 33), விரைந்து சென்று அவர்களை பிடிக்க முயன்றார்.

அப்போது அந்த கொள்ளையர்கள், மணிகண்டனை கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து பொருட்களுடன் தப்பி ஓடினர். இதையடுத்து சக காவலாளிகள் அங்கு விரைந்து வந்து காயமடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புலியூர் மேற்கு பகுதியை சேர்ந்த ஜோதிவேல் மகன் அருள்ராஜ்(31), தவிடன் மகன் தெய்வரசு(29), தங்களி குப்பம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலு மகன் வீரமணி(35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

சோதனை சாவடிகள் அமைப்பு

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் பெரியக்குப்பம் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், காவலாளிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் விசாரணை நடத்தினார்.

பின்னர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் திருச்சோபுரம், பெரியக்குப்பம், அய்யம்பேட்டை, பூச்சிமேடு ஜங்ஷன், பூச்சிமேடு சுடுகாடு பகுதி ஆகிய 5 இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருச்சோபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்