திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு
திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்று கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து நூலகம் அமைப்பதற்கான அடிப்படை பணிகளை பொதுப்பணித்துறை செய்ய தொடங்கியது.
இதில் முதற்கட்டமாக நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்கள் கொண்டதாக இந்த நூலகத்தை அமைக்க பொதுப்பணித்துறை திட்டம் வகுத்துள்ளது. இந்த நிலையில், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், திருச்சியில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைப்பதற்கான ரூ.175 கோடியில் கட்டுமானப் பணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ஜனவரி 30-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்ட 2 நாட்களில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை டெண்டர் கோரியுள்ளது.