குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-12-19 02:51 GMT

சென்னை,

சென்னை திருமங்கலம், பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (32 வயது). தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு, 2021-ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை தேவராஜ் தெருவைச் சேர்ந்த சாந்தி (27 வயது) என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் கணவன்-மனைவி இருவரும் பல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். இருப்பினும் எந்த பயனும் இல்லை என தெரிகிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் சாந்தி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர், மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் சாந்தியின் தாயார் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். ஏற்கனவே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த சாந்திக்கு தாய் உயிரிழந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவரது மனநிலை மிகவும் மோசமானது. இதனால் சாந்தி சரியாக மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவர், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாந்தி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்