இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-12-2024
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 22-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரா வரை 4 வழிச்சாலை அமைக்க ரூ.1,338 கோடி ஒதுக்கியது மத்திய அரசு. புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் இருவழியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ரஷியாவின் புதிய ஏவுகணையான ஓரேஷ்னிக், அமெரிக்க ஏவுகணை தடுப்பு அமைப்புகளை முறியடிக்கும் ஆற்றல் கொண்டது என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
பெண் மந்திரியை அவதூறாக பேசிய விவகாரத்தில் கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி கைது செய்யப்பட்டார். சட்டமன்ற வளாகத்தில் வைத்து காவல்துறை கைது செய்துள்ளனர்.
வேலூரில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் சார்பிலும் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிப்பதாகவும் பேச்சுவார்த்தையில் வனத்துறை உறுதி அளித்தனர்.
மேட்டூர் அனல்மின் நிலைய விபத்து மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து அறிவிக்கை வெளியிட கவர்னர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை, அரசுக்கு பரிந்துரைக்க மட்டுமே முடியும். மாநில அரசின் சட்டப் பிரிவுகளுக்கு உட்பட்டே துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, புதுச்சேரியில் வரும் 31ம் தேதி நள்ளிரவு 1 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரெஸ்டோ பார்கள், திறந்தவெளி மதுபான கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு 1 மணி வரை புதுச்சேரி கலால்துறை அனுமதி வழங்கி உள்ளது.
3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மகனுக்கு காட்டும் அக்கறையை கொடுத்த வாக்குறுதிகள் மீதும் காட்ட வேண்டும்; அரசுப் பணிக்காக தகுதிப்படுத்திக் கொண்ட இளைஞர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக எம்.பி.,க்களிடம் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேரில் சென்று நலம் விசாரித்தார். பிறகு ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதாப் சாரங்கி தலையில் இரண்டு தையல்கள் போடப்பட்டு உள்ளன. இருவரது உடல்நிலையும் சீராக உள்ளது. இன்னும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தில் நடக்கக்கூடாது என்றார்.