இளம் வயதில் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படும் சிறுவர்கள்

இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது. இதுதொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர், மருத்துவர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.

Update: 2023-05-12 19:00 GMT

இயற்கையை ரசிக்கும் ஓர் அற்புதமான வாய்ப்பு கண்களுக்கு மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆனால் இந்த கண்களை பாதுகாப்பதில் நாம் பலரும் இன்று அலட்சியம் காட்டுவதால், பல்வேறு பின்விளைவுகளை சந்திக்கிறோம். முதுமை வயதை அடைவதற்கு முன்பே கண்பார்வை மங்கி போவது, முதுமையில் அணிய வேண்டிய கண் கண்ணாடியை இளமையில் அணிவது உள்பட ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம்.

முன்பு கண் கண்ணாடி அணிவதை ஒரு குறையாக பார்த்தனர். திருமண நிகழ்வுக்குக்கூட பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு காலத்தில் அது தடையாக இருந்திருக்கிறது. ஆனால் இன்றோ கண்ணாடி அணிவது நாகரிகமாக மாறத் தொடங்கிவிட்டது. இதன் விளைவு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் கண்ணாடி அணியும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

இளம் வயதினர்

தற்போது பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கண் பார்வை பிரச்சினை அதிகரித்து, கண்ணாடி அணியும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இளம்வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

நாகரிக வளர்ச்சி எதில் இருக்க வேண்டுமோ? அதில் இல்லாமல், மற்றவற்றில் ஊற்றி வளர்ப்பது, இன்று பெரிய அளவிலான பிரச்சினைகளை இன்றைய தலைமுறை சந்திக்க தொடங்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் இளம் வயதிலேயே கண்ணாடி அணிவது. இதுதொடர்பாக ஆசிரியர்கள், பெற்றோர், மருத்துவர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.

இது தொடர்பாக ஆசிரியர், டாக்டர் உள்பட பல்வேறு தரப்பினர் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்க்கலாம்.

காய்கறி, கீரைகள்

ஜெயக்குமார் (டாக்டர், திண்டுக்கல்) :- பொதுவாக பார்வைக்குறைபாடு என்பது நமது முன்னோர்களுக்கு இருந்திருந்தால் அவர்கள் மூலமாக நமது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு கண்ணாடி அணிவது தான் ஒரே தீர்வு. பிள்ளைகளுக்கு 19 வயது நிரம்பிய பிறகு வேண்டுமானால் லேசர் சிகிச்சை செய்து கண் பார்வை குறைபாட்டை சரிசெய்யலாம். சத்துக்குறைபாட்டால் கண் பார்வை குறைபாடு ஏற்படும் என்று கூறிவிட முடியாது.

வைட்டமின் 'ஏ' குறைபாடு ஏற்பட்டால் மாலைக்கண் நோய் ஏற்படும். அதற்கு தற்போது சிகிச்சை முறைகள் இருக்கின்றன. நாம் எதை பார்ப்பது, படிப்பதாக இருந்தாலும் நல்ல வெளிச்சம் இருக்கும் இடத்தை பயன்படுத்தினால் நல்லது. அதே நேரம் டி.வி. செல்போன்களில் இருந்து வெளிப்படும் அதீத வெளிச்சம் கண் பார்வை குறைபாட்டை ஏற்படுத்திவிடும். நமது பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பிரேமா ராமநாதன் (ஆசிரியை, மாசிலாமணிபுரம்) :- சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு காய்கறி, கீரை போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதுபோன்ற உணவை சிறுவர், சிறுமிகள் சாப்பிடுவதில்லை. துரித வகை உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். அவற்றால் எந்த சத்துகளும் கிடைக்கப்போவதில்லை. மாறாக சத்துக்குறைபாடு ஏற்பட்டு கண் பார்வை பாதிக்கப்படுகிறது. அதேபோல் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதும் கண் பார்வை பாதிக்கப்படுவதற்கு காரணமாகிவிடுகிறது. எனவே பெற்றோர் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதுடன் அவர்களை கவனமுடன் கண்காணிக்க வேண்டும். அப்படி செய்தால் இளவயதில் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மீட்டெடுக்க வேண்டும்

ஆசை அலங்காரம் (கல்வியாளர், சிறுகுடி) :- டி.வி. செல்போன் பயன்பாடு அதிகரிப்பதற்கு முன்பு இளவயதினர் 10 பேரில் ஒன்று அல்லது 2 பேர் மட்டுமே கண்ணாடி அணிந்தனர். ஆனால் தற்போதைய நிலைமை அப்படி அல்ல. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகளிலேயே அதிக நேரத்தை மாணவ-மாணவிகள் செலவிட்டனர். அதன் தொடர்ச்சியாக விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக செல்போனை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இதன் காரணமாக தற்போது ஒரு வகுப்பறையில் 40 பேர் இருக்கின்றனர் என்றால் அவர்களில் 8 முதல் 10 பேர் கண்ணாடி அணிந்து இருக்கின்றனர். ஆனாலும் செல்போன்களை பயன்படுத்துவதை அவர்கள் நிறுத்துவதில்லை. இதே நிலை நீடித்தால் அவர்களின் கண்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே செல்போன் உலகத்தில் மயங்கி கிடக்கும் மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு கண்பார்வையை பலப்படுத்தும் காய்கறிகள், கீரைகளை உணவாக சமைத்து கொடுக்க வேண்டும்.

பாதுகாக்க வேண்டும்

அழகம்மாள் (குடும்ப தலைவி, சேத்தூர்) :- எங்கள் பகுதியில் சில சிறுவர், சிறுமிகள் கண்ணாடி அணிந்திருக்கின்றனர். டி.வி. செல்போன்களில் இருந்து வெளிப்படும் அதிக வெளிச்சத்தை உன்னிப்பாக கவனித்ததால் பார்வை குறைபாடு ஏற்பட்டு அவர்கள் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சிலருக்கு சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் கண்ணாடி அணியும் நிலை வரும். முன்பெல்லாம் பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுக்கும் போது ஒரு நோட்டில் குறிப்பாக எழுதி கொடுப்பார்கள்.

அதை பார்த்து நாமும் பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடங்களை சொல்லி கொடுப்போம். அவசியம் ஏற்பட்டால் மட்டும் செல்போனில் சில தகவல்களை பார்க்க பிள்ளைகளை அனுமதிப்போம். ஆனால் தற்போது வீட்டுப்பாடம், பாடக்குறிப்பு உள்பட அனைத்து விவரங்களையும் செல்போனில் தான் அனுப்புகின்றனர். அதனால் பிள்ளைகளும் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதை தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.

அலட்சியம் காட்டாமல்...

சுல்தான் (கண்ணாடி கடை உரிமையாளர், பழனி) :- தற்போது 2 வயது குழந்தைக்கு கூட கண்பார்வை குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி அணியும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கம் மாறியதே ஆகும். ஆரம்பத்திலேயே கண் பார்வை குறைபாடு பிரச்சினையை கண்டறிந்து சரிசெய்துவிட்டால் பரவாயில்லை. ஆனால் சில பெற்றோர் அவர்களின் பிள்ளைகள் 8-ம் வகுப்பு படிக்கும் நிலையில் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பின்னர் கண்ணாடி அணிய வைக்கின்றனர்.

இதனால் அவர்கள் அதிக பவர் கொண்ட கண்ணாடிகளை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இன்றைய நாகரிக உலகில் 100-ல் 70 பேருக்கு கண் பார்வை குறைபாடு இருக்கிறது. இதில் குறைந்த எண்ணிக்கையில் தான் முறையான பரிசோதனை நடத்தி கண்ணாடி அணிகின்றனர். எனவே கண்பார்வை பிரச்சினையில் அலட்சியம் காட்டாமல் உரிய பரிசோதனை நடத்தி கண்ணாடி அணிய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பாதுகாப்போம்

ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், இருட்டில் பார்க்க முடியாமல் எப்படி திணறுகிறோம். அப்படி இருக்கும் போது கடவுள் நமக்கு அளித்த சிறப்பு பரிசான கண்களை நாம் சரியான முறையில் பாதுகாப்போம். அலட்சியம் காட்டாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்