தற்கொலைக்கு தூண்டிய காதலன் கைது

ஊட்டி அருகே கல்லூரி மாணவி சாவில் திடீர் திருப்பமாக, தற்கொலைக்கு தூண்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-03 19:30 GMT

கோத்தகிரி

ஊட்டி அருகே கல்லூரி மாணவி சாவில் திடீர் திருப்பமாக, தற்கொலைக்கு தூண்டிய காதலனை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இடுஹட்டி தொட்டண்ணி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் வீட்டுக்கு வந்த பிரியதர்ஷினி யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து உள்ளார். இதற்கிடையே கடந்த 30-ந் தேதி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து மாணவியின் உடல் அங்குள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் பிரியதர்ஷினியின் செல்போனை பெற்றோர் பார்த்தனர். அப்போது அந்த மாணவி அதே பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகன் நந்தகுமார் (வயது 32) என்பவருடன் இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டதும், செல்போனில் பேசியதும் தெரியவந்தது.

பிரேத பரிசோதனை

இதனால் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து விசாரித்து நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் கோத்தகிரி போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே பிரியதர்ஷினி தற்கொலை செய்ததை போலீசுக்கு தெரிவிக்காமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அஜய்கான் கோத்தகிரி போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் முன்னிலையில் கல்லூரி மாணவியின் உடல் சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் மீண்டும் அங்கேயே புதைக்கப்பட்டது.

காதலன் கைது

இதுதொடர்பாக பிரியதர்ஷினியின் தற்கொலையை மறைத்து உடல் அடக்கம் செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நந்தகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரும், பிரியதர்ஷினியும் காதலித்து வந்து உள்ளனர். மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு நந்தகுமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோத்தகிரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்