புதுச்சத்திரம் அருகே கடல் அலையில் சிக்கி சிறுவன் பலி
புதுச்சத்திரம் அருகே கடல் அலையில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிதம்பரம்,
5 வயது சிறுவன்
புதுச்சத்திரம் அருகே சேத்தோடை மீனவ கிராம கடற்கரையோரம் நேற்று காலை 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் பிணமாக கிடந்தான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கிராம மக்கள் இதுபற்றி புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பார்வையிட்டு அருகில் உள்ள மீனவ கிராமங்களில் விசாரணை நடத்தினர்.
கடல் அலையில் சிக்கி பலி
விசாரணையில், அவன் சிங்காரதோப்பு கிராமத்தை சேர்ந்த வேலு மகன் விவன்(வயது 5) என்பதும், நேற்று காலை அன்னம்பேட்டை கடற்கரைக்கு கை, கால்களை கழுவ சென்றபோது, கடல் அலையில் சிக்கி பலியானதோடு, அவனது உடல் சேத்தோடை கடற்கரையோரம் ஒதுங்கியதும் தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வேலு குடும்பத்தினர், உறவினர்கள் விரைந்து வந்து விவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அவனது தாயார் ஷர்மிளா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.