காதலியுடன் மகளிர் விடுதியில் வாலிபர் உல்லாசம்: நேரில் பார்த்து கூச்சலிட்ட பெண்ணுக்கு கொலைமிரட்டல்
விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் அத்துமீறி புகுந்த அந்த வாலிபர் காதலியிடம் எல்லை மீறியதாக கூறப்படுகிறது;
திருச்சி,
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அழகுகலை குறித்து தில்லைநகரில் உள்ள நிறுவனத்திற்கு சென்று படித்து வந்தார். இதற்காக அந்த பெண் அங்குள்ளதனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று அந்த பெண் வழக்கம் போல் பயிற்சி முடிந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். பின்னர் அறையில் தங்கி இருக்கும் தோழியை பார்க்க சென்றார். அந்த அறையின் கதவு தாழ்ப்பாள் போடாமல் இருந்த நிலையில் திடீரென கதவை தள்ளித் திறந்தார். அப்போது தனது தோழியுடன் ஒரு வாலிபர் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் இதுபற்றி வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் தில்லைநகரைச் சேர்ந்த 24 வயது வாலிபர் என்று தெரியவந்தது.
இந்த வாலிபரும், விடுதியில் தங்கியிருந்த அந்த இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் அத்துமீறி புகுந்த அந்த வாலிபர் காதலியிடம் எல்லை மீறியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.