குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது
குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது
கொடைக்கானல் வனப்பகுதியில் ஒரு லிட்டர், 2 லிட்டர் காலி குடிநீர் பாட்டில்கள் வீசப்படுகிறதா? என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கொடைக்கானல் நகராட்சி வழக்கறிஞர் ஆணையருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கொடைக்கானல் நகராட்சி வழக்கறிஞர் ஆணையர் முகமது முகைதீன் கொடைக்கானல் வனப்பகுதிகளை கடந்த 3 நாட்களாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பஸ் நிலையம் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களிலும், வெளியூரில் இருந்து கொடைக்கானலுக்கு வந்த பஸ்களிலும் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் குடிநீர் பாட்டில்களை பயணிகள், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தவர்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
இதையடுத்து வழக்கறிஞர் ஆணையர் நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானல் பகுதியில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. இங்குள்ள கடைகள், விடுதிகளில் குடிநீர் பாட்டில்கள் தாராளமாக கிடைக்கின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியின் நுழைவு வாயில் பகுதிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி, பண்ணைக்காடு உள்ளிட்ட 5 இடங்களில் நிலையான சோதனை சாவடி அமைத்து தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்து மறுசுழற்சி செய்யப்பட உள்ளது என்றார்.