புரட்டாசி மாதம் பிறப்பு:கிணத்துக்கடவு சந்தையில் காய்கறி விலை 'கிடுகிடு' உயர்வு
புரட்டாசி மாதம் பிறந்ததை யடுத்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி உள்பட காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
கிணத்துக்கடவு
புரட்டாசி மாதம் பிறந்ததை யடுத்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் தக்காளி உள்பட காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
காய்கறி சந்தை
கிணத்துக்கடவில் கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த காய்கறி சந்தைக்கு கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.
அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் வியாபாரிகள் காய்கறி கொள்முதல் செய்த விலை விவரங்கள் கிலோவில் வருமாறு:- தக்காளி 30-ரூபாய் முள்ளங்கி 30-ரூபாய், கத்திரிக்காய் 55-ரூபாய், பீர்க்கங்காய் 42-ரூபாய், பீட்ரூட் 40-ரூபாய், அவரைக்காய் 45-ரூபாய், வெண்டைக்காய் 45-ரூபாய், பாகற்காய் 56-ரூபாய், புடலங்காய் 28-ரூபாய், சுரைக்காய் 28-ரூபாய், பச்சை மிளகாய் 55- ரூபாய், பொரியல் தட்டை பயிறு 35 ரூபாய்க்கும் ஏலம் போனது.
விலை உயர்வு
காய்கறிகள் மொத்த விலையில் அதிக விலைக்கு ஏலம் போனதால் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் தக்காளி உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.
இது குறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது:- தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் அதிக அளவில் காய்கறிகளை பொதுமக்கள் வாங்குவது வழக்கம். ஆனால் குறைந்த அளவில் காய்கறிகள் வரத்து உள்ளதால் காய்கறிகள் கூடுதல் விலைக்கு தினசரி காய்கறி சந்தையில் விற்பனையாகி வருகிறது. கிராமப் பகுதியில் இருந்து அதிக அளவில் காய்கறி வரும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் தசரா பண்டிகை முடியும் வரையில் காய்கறி விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.