பொதுமக்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் புத்தக திருவிழா

நாகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா பொதுமக்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகிறார்கள்.

Update: 2022-06-28 17:37 GMT
நாகையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா பொதுமக்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகிறார்கள்.


புத்தக திருவிழா

நாகையில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் புத்தக திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதில் 110 பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 114 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. புத்தக விலையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கலை நிகழ்ச்சிகள்

புத்தக திருவிழாவையொட்டி தினமும் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் 1000 பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் நுழைவு வாயிலின் வலது புறத்தில் விளையாட்டு சாதனங்கள், உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடையே வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில் நாகையில் நடந்து வரும் புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஏராளமான புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள்.

பட்டிமன்றம்

புத்தக திருவிழாவில் இன்று (புதன்கிழமை) 'இலக்கியங்களை நாம் கற்பது இன்பமுற்று மகிழவா? பின்பற்றி வாழவா?' என்ற தலைப்பில் ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) பாலகிருஷ்ண குமார் தலைமையில் 'வழித்துணை' என்ற தலைப்பிலும், திருவாரூர் சண்முகவடிவேல் தலைமையில் 'வாழ்க வையகம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கவிதாசன் தலைமையில் 'புதிய சிந்தனைகள் வெற்றியின் வேர்கள்' என்ற தலைப்பிலும், கவிதா ஜவகர் தலைமையில் 'பெயரில் என்ன இருக்கிறது' என்ற தலைப்பிலும் கருத்தரங்கம் நடக்கிறது. 2-ந்தேதி (சனிக்கிழமை) சுகிசிவம் தலைமையில் 'மக்களை மாற்றும் மகத்தான பணி' என்ற தலைப்பில் சிந்தனை அரங்கமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெங்கடேஸ்வரன் தலைமையில் 'காற்றுவெளியில் கவின்மிகு நூலகம்' என்கிற தலைப்பில் கருத்தரங்கமும் நடக்கிறது. அதேபோல விழாவின் நிறைவாக 4-ந்தேதி (திங்கட்கிழமை) முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. தலைமையில் 'மானுடம் வெல்லும்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும், ஆறு. துரைக்கண்ணு தலைமையில் 'வாசிப்பை வாழ்வியல் ஆக்கியது அந்த காலமா? இந்த காலமா?' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடக்கிறது.

மக்களை மகிழ்விக்கும் கலெக்டர்

நாகையில் கடற்கரை விழா, நாகை சங்கமம் என அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை கலெக்டர் அருண்தம்புராஜ் மகிழ்வித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் கலெக்டர், தற்போது நடத்தி வரும் புத்தக திருவிழா, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்