திருச்சி ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வாட்ஸ்-அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு 3 மணி நேரம் நடந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வாட்ஸ்-அப் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு 3 மணி நேரம் நடந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பயணிகள், ரெயில்களில் திருச்சிக்கு வந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் இந்த ரெயில் நிலையம் பயணிகள் கூட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்தநிலையில் நேற்று மதியம் திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு வாட்ஸ்-அப் மூலம் மர்ம ஆசாமி ஒருவன் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். அதில் "நான் மனித வெடிகுண்டு. இன்றைக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்போறேன்... முடிந்தால் காப்பாற்று...'' என்று தகாத வார்த்தை சேர்த்து அனுப்பி இருந்தான்.
தீவிர சோதனை
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நுண்ணறிவு பிரிவு போலீசார் இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயனுக்கு தகவல் கொடுத்தனர். அவருடைய உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி தலைமையில் உதவி போலீஸ் கமிஷனர் அஜய்தங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார் (கண்டோன்மெண்ட்), மோகனசுந்தரி (திருச்சி ரெயில்வே), தேவேந்திரன் (ரெயில்வே பாதுகாப்பு படை) மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ரெயில் நிலையம் பகுதி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மாநகர வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய்கள் டெய்சி, ரூபி மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை மோப்பநாய் உதவியுடனும், மெட்டல் டிடெக்டர்கள் உதவியுடன் ரெயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகம், அங்குள்ள பார்சல்கள், பயணிகளின் உடைமைகள் போன்றவற்றை தீவிர சோதனை செய்தனர். மேலும் திருச்சியில் இருந்து கரூருக்கு புறப்பட்டு சென்ற ரெயில் மற்றும் திருச்சி வழியாக சென்ற ரெயில்களில் அவர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
போலீசார் நிம்மதி
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோப்பநாய்கள் மூலம் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு போலீசார் கூறும்போது, வாட்ஸ்-அப்பில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி வந்த செல்போன் எண் யாருடையது? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக மிரட்டல் விடுத்தார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அந்த மர்ம ஆசாமி கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.