வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்பநாய் உயிரிழப்பு
தேனி மாவட்ட போலீஸ் துறையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்ப நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
தேனி மாவட்ட போலீஸ் துறையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் வைகை என்ற பெயரில் மோப்பநாய் பணியாற்றியது. இந்த மோப்பநாய் வயது 14. கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேல், மாவட்டத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து இந்த மோப்பநாய் மாவட்டம் முழுவதும் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. வயது முதுமை காரணமாக சில நாட்களாக இந்த மோப்பநாய் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது. கால்நடை டாக்டர்கள் அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அது உயிரிழந்தது. இது போலீசார் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தேனி ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன் தலைமையில் மோப்பநாய் உடலுக்கு போலீசார் மாலை அணிவித்தும், மலர் தூவியும் இறுதி மரியாதை செய்தனர். பின்னர் போலீஸ் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.