மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலி
திருப்பத்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பொக்லைன் ஆபரேட்டர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு நிலானூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் திருப்பதி (வயது 22) பொக்லைன் ஆபரேட்டர். இவர் நேற்று திருப்பத்தூர் அருகே பூரிகமானிமிட்டா பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அதேபோல் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் அருண்குமார் (26) அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் சேகர் மகன் நரேஷ் (22), துரை மகன் நாகராஜ் (22) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் திருப்பத்தூருக்கு சினிமா பார்க்க வந்து கொண்டிருந்தார்
சி.கே. ஆசிரமம் பகுதியில் வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் திருப்பதி மற்றும் அருண்குமார் தூக்கி வீசப்பட்டு ரத்த காயங்களுடன் மயக்கம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து, வரும் வழியில் திருப்பதி இறந்து விட்டார் என்று கூறினர்.
பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் அருண்குமார் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நரேஷ் மற்றும் நாகராஜ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.