உத்தனப்பள்ளி அருகேதென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் உடல் மீட்பு

உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-09-09 19:30 GMT

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

நிறுவன ஊழியர்

உத்தனப்பள்ளி அருகே உள்ள கூலியம் கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு என்ற சந்திரன் (வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர்களான இவர்கள் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பண்டப்பள்ளி அருகே தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் சென்றது.

இதனால் அவர்கள் மொபட்டில் தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். அப்போது நிலைதடுமாறி அவர்கள் 2 பேரும் மொபட்டுடன் தென்பெண்ணை ஆற்றில் தவறி விழுந்தனர். இதில் ரஞ்சித்குமார் காயத்துடன் உயிர் தப்பினார். சந்திரன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்.

உடல் மீட்பு

இதுகுறித்து ராயக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சந்திரனை தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து சிறிது தூரத்தில் சந்திரன் உடல் மிதந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டனர். அப்போது இறந்தவரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தரைப்பாலத்தில் சுவர் கட்டக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம் உத்தனப்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு இதுதொடர்பாக கொண்டு செல்லப்படும் என கூறினர்.

இதையடுத்து போலீசார் சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்