மர்மமான முறையில் தூக்கில் வாலிபர் பிணம்

அதிராம்பட்டினம் அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-06 20:31 GMT

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பள்ளிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் மெய்ஞானமூர்த்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 34). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செந்தில்குமார் தனியாக வசித்து வந்தார். அவரது தந்தை மெய்ஞானமூர்த்தி அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் செந்தில்குமார், வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அருகில் இருந்தவர்கள் மெய்ஞானமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர்.

உடலில் காயங்கள்

தகவலின்பேரில் மெய்ஞானமூர்த்தி விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் மகனின் உடலை பார்த்தபோது அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மெய்ஞானமூர்த்தி தனது மகனின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடித்துக் கொலையா?

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் செந்தில்குமாரை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கியது தெரிய வந்தது. இதன் காரணமாக மனம் உடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சம்பந்தப்பட்ட நபர்கள் அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்