கால்களை பதம் பார்க்கும் காலி மதுபாட்டில்கள்

Update: 2022-07-06 16:51 GMT


உடுமலை பகுதியில் மதுப்பிரியர்கள் வீசும் உடைந்த காலி மது பாட்டில்கள் காலைப் புண்ணாக்குவதால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

கவுரவ அடையாளம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மது என்னும் அரக்கனால் அவதிப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொலை, கொள்ளை, விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் மதுவின் பங்கு பெருமளவு உள்ளது. மது அருந்துவது கேவலம் என்ற நிலை மாறி கவுரவ அடையாளமாக மாறி வருகிறது. இதனால் பல இளைஞர்கள் மது என்னும் மாய வலையில் சிக்கி சீரழிந்து வருகிறார்கள்.

சில பகுதிகளில் சிறுவர்களும், பெண்களும் மது அருந்தும் அவல நிலையும் உள்ளது. பல இடங்களில் அதிகாலை வேளையிலும், இரவு 10 மணி கடந்த பிறகும் என்று 24 மணி நேரமும் பக்கவாட்டுக்கதவுகள் வழியாக மது விற்கப்படுகிறது. சில இடங்களில் டோர் டெலிவரி நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

தண்ணீர் மாசு

குடிமகன்களால் மனைவி, மக்கள் அவதிப்படுவது மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவதிப்படும் நிலையே உள்ளது. சாலையோரம், மரத்தடி, புதர் மறைவு, குட்டிச் சுவர், முட்டுச்சந்து, வயல் வெளி, நீர்நிலைகள் என்று அனைத்து இடங்களிலும் குடிமகன்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது.

இவ்வாறு ஆங்காங்கே உட்கார்ந்து மது அருந்தும் மதுப்பிரியர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதாலும், தன்னிலை மறந்து விழுந்து கிடப்பதாலும் பெண்களும், குழந்தைகளும் மதுப்பிரியர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியைக் கண்டு பிடித்து நடமாட வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு பொது இடங்களில் மது அருந்தும் மதுப்பிரியர்கள் காலி மது பாட்டில்களை ஆங்காங்கே வீசிச்செல்கின்றனர். ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் வீசப்படும் மது பாட்டில்கள், நொறுக்குத் தீனிக்காக கொண்டு வரப்படும் பாலிதீன் கவர்கள் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் டம்ளர்களால் தண்ணீர் மாசுபடுகிறது. அதுபோல விளைநிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் வீசிச் செல்லப்படும் உடைந்த மதுபாட்டில்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறுவர்களின் காலில் குத்திகாயம் ஏற்படுத்துகிறது.

காலில் குத்தும் அபாயம்

அத்துடன் மதுபாட்டில்களின் உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் குளம்புகளுக்கு இடையில் சிக்கி காயத்தை உண்டாக்குகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்கள் வன விலங்குகளின் காலில் குத்தி உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடும். எனவே மலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது போல காலி மதுபாட்டிலை திரும்ப ஒப்படைத்து பணம் பெறும் நடைமுறையை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்த வேண்டும்.

பொது வெளிகளில் மது அருந்துவதை முழுமையாகக்கட்டுப்படுத்த வேண்டும். வீட்டுக்கு கேடு தரும் மதுவால் நாட்டுக்கு வருவாய் தர முடிகிறது. ஆனால் நாட்டு மக்களுக்கு அவதியை மட்டுமே தரமுடிகிறது. இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்