காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட படகுகள்

கல்வராயன்மலையில் பெய்த கன மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் படகுகள் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் 7 நாட்கள் படகு சவாரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-28 17:23 GMT

கச்சிராயப்பாளையம்:

கல்வராயன்மலையில் 171 கிராமங்களில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் படகு குளம் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

கல்வராயன்மலையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

அடித்துச்செல்லப்பட்ட படகுகள்

படகு குளத்திற்கும் காட்டாற்று வெள்ளம் வந்தது. இதனால் அந்த குளம் நிரம்பி வழிந்தது. குளத்தில் இருந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. படகு குளத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 8 படகுகளை வெள்ளம் அடித்துச்சென்றது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள், கயிறு மூலம் கட்டி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 8 படகுகளையும் மீட்டனர். பின்னர் படகுகள் அனைத்தும், மேட்டுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கியதால் 8 படகுகளும் சேதமடைந்துள்ளன. அதில் தண்ணீர் நிரம்பி உள்ளன. சேதமடைந்த படகுகளை ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் 7 நாட்கள் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்ற வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். அதே நேரத்தில் நீர்வீழ்ச்சிகளில் அவர்கள் ஆனந்தமாக குளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்