குற்றாலத்தில் தொடங்கியது படகு சவாரி... திறந்து வைத்த ஆஸ்திரேலிய பெண் - சுற்றுலா பயணிகள் படு குஷி..!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகு சவாரி இன்று தொடங்கியது.

Update: 2023-07-10 17:11 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படகு சவாரி இன்று தொடங்கியது.

குற்றாலத்தில் சீசன் தற்போது பிரமாதமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து சீசனை அனுபவிக்கிறார்கள். ஆண்டுதோறும் இந்த சீசனின் போது சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் இருக்கும் படகு குழாமில் படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம்.

தற்போது வெண்ணமடைகுளம் நிரம்பி இருப்பதால் படகு சவாரி இன்று முதல் தொடங்கப்படுகிறது. தென்காசி மாவட்ட கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை தொடங்கி வைக்க வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றுலா பயணியை அழைத்து படகு குழாமை திறக்க வைத்து படகு சவாரியை தொடங்கி வைத்தனர்.

சுற்றுலா பயணிகளின் சவாரிக்காக 2 பேர் பெடல் படகுகள் 6, நான்கு பேர் பெடல் படகுகள் 16, 4 பேர் துடுப்பு படகுகள் 5, தனி நபர் படகு 4 ஆக மொத்தம் 31 படகுகள் இயக்கப்படுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கட்டணமாக இருவர் செல்லும் பெடல் படகுகளுக்கு ரூ.150, நான்கு பேர் பெடல் படகுகளுக்கு ரூ.200, 4 பேர் துடுப்பு படகுகளுக்கு ரூ.250, தனிநபர் படகுக்கு ரூ.150 விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் 30 நிமிடங்களுக்கு மட்டுமே.

Full View

Tags:    

மேலும் செய்திகள்