படகு பாதிப்பு கணக்கெடுப்பு 2 நாளில் நிறைவடையும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
புயலில் சேதமடைந்த விசைப்படகுகளை கணக்கெடுக்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மாண்டஸ் புயல் கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காசிமேட்டில் உள்ள 100 விசைப்படகுகள் சேதமடைந்தது. சேதமடைந்த படகுகள் ஒவ்வொன்றும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளவை என கூறப்படுகிறது. விசைப்படகுகள் மூழ்கியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். சேதமடைந்த படகுகளை மறு கட்டமைப்பு செய்யவும், மூழ்கிய படகுகளுக்கு முழுமையாகவும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில், காசிமேட்டில் புயலால் பாதிக்கப்பட்ட படகுகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக முழுவதும் மாண்டஸ் புயலில் சேதமடைந்த விசைப்படகுகளை கணக்கெடுக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
பாதிப்புகள் குறித்து 2 நாட்களுக்குள் கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் புயலால் பாதிக்கப்பட்ட படகுகள், வலைகள் கணக்கெடுப்பு 2 நாளில் நிறைவடையும், மீனவர்களுக்கான காப்பீடு தொகை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.