ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள்
முத்தூர் அருகே மேட்டாங்காட்டுவலசு பகுதிகளில் ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தயாராகி பூத்து குலுங்குகின்றன.
முத்தூர்
முத்தூர் அருகே மேட்டாங்காட்டுவலசு பகுதிகளில் ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தயாராகி பூத்து குலுங்குகின்றன.
கீழ்பவானி பாசன பகுதிகள்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை இருந்து வருகிறது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டு தோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல், மஞ்சள், கரும்பு, வாழை மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
செண்டுமல்லி பூக்கள் சாகுபடி
இந்த நிலையில் முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசு சுற்றுவட்டார கிராம பகுதி விவசாயிகள் ஆண்டு தோறும் ஆயுதபூஜை விற்பனைக்காக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் அதிகளவு சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு ஆயுதபூஜை பூக்கள் விற்பனைக்காக இப்பகுதி விவசாயிகள் நாற்றுகள் நடவு செய்யும் நேரத்தில் போதிய மழை பெய்யாததால் ஏற்பட்ட நீர் தட்டுப்பாடு காரணமாக செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் செடிகளை குறைந்த அளவே சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை வருகிற 23-ந் தேதி (திங்கள்கிழமை) தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
ஆயுதபூஜை விற்பனை
இதன்படி இப்பகுதிகளில் சாகுபடி செய்துள்ள செண்டுமல்லி செடிகளில் செண்டுமல்லி பூக்கள் தற்போது நன்கு இள மஞ்சள் நிறத்திலும், கோழிக்கொண்டை பூக்கள் சிவப்பு நிறத்திலும் கலர் கலராக பூத்து குலுங்குகின்றன. இதுபற்றி செண்டுமல்லி சாகுபடி செய்துள்ள மேட்டாங்காட்டுவலசு கிராம பகுதியை சேர்ந்த விவசாயி வி.ஆனந்தன் கூறியதாவது:
இப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஆயுதபூஜை விற்பனைக்காக விவசாய வயல்களில் செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்து வருகிறோம், இதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்ய உழவு கூலி, பார் கட்டுதல், நாற்று நடுதல், களை மேலாண்மை, உர மேலாண்மை கடைபிடித்தல் என 2 சாகுபடிக்கும் சேர்த்து சுமார்
ரூ.30 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளோம்.
செண்டுமல்லி நாற்றுக்கள்
பொதுவாக செண்டுமல்லி நாற்றுக்களை நடவு செய்த 60 நாட்களிலும், கோழிக்கொண்டை பூக்கள் 80 நாட்களிலும் பலன் தரக்கூடியது ஆகும். இதன்படி தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள செண்டுமல்லி, கோழிக்கொண்டை செடிகளில் செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தற்போது நன்கு வளர்ந்து பூத்து குலுங்குகின்றன. இந்த செண்டுமல்லி கோழிக்கொண்டை பூக்களை ஆயுதபூஜைக்கு 3 நாட்களுக்கு முன்பு அதாவது நாளை 21-ந் தேதி (சனிக்கிழமை) முதல் அறுவடை பணிகளின் தொடங்கப்பட உள்ளது. பின்னர் செடிகளில் இருந்து செண்டுமல்லி, கோழிக்கொண்டை, பூக்கள் உதிராமல் பறிக்கப்பட்டு திருப்பூர், கோவை ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல், திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மொத்த வியாபாரிகளிடம் கிலோ அளவில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து அனுப்பி வைத்து விடுவோம். மேலும் தேவைக்கேற்ப இருப்பு வைத்து இப்பகுதிகளில் ஆயுதபூஜை நாளில் செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்களை கட்டி விற்பனை செய்வதும் வழக்கம் ஆகும்.
குறைந்த நீர் நிர்வாகம்
இந்த ஆண்டு அதாவது கடந்த 2 மாதங்களாக போதிய பருவ மழை பெய்யாத நிலையிலும் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரினை பயன்படுத்தி குறைந்த நீர் நிர்வாகத்தில் சாகுபடி செய்துள்ள செண்டுமல்லி, கோழி கொண்டை பூக்கள் இந்த ஆண்டும் வழக்கம் போல் கூடுதல் பலன் அளிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டாங்காட்டுவலசு கிராம பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள செண்டுமல்லி, கோழிக்கொண்டை பூக்கள் தற்போது நன்கு வண்ணமயமாக பூத்து, குலுங்கி காண்போர் மனதை பரவசப் படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.