மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மத்தியில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2023-09-24 12:06 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது;

"பெரியாரும், அண்ணாவும் சந்தித்த ஊர் திருப்பூர். திருப்பூரை மாநகராட்சியாக்கியது மட்டுமல்ல. திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கியது கலைஞர். இந்திய நாடளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலின் தொடக்க புள்ளியாக முகவர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாகிய நீங்கள் தான் உங்களுடைய வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வருகிற நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கு நீங்கள் தான் பொறுப்பாளர்கள். அதை மறந்துவிடக்கூடாது. நாற்பதும் நமதே, நாடும் நமதே என நான் முழங்கி இருக்கிறேன் என்றால் அதெல்லாம் உங்களின் மேல் நான் வைத்துள்ள அளவுக்கடந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் முழங்குகிறேன்.

இன்றிலிருந்து கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தில் நீங்கள் பணியாற்ற வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன். வெற்றி மட்டும் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். வெற்றியை அடைவதற்கான வழிமுறையில் நீங்கள் பயணிக்க வேண்டும். பொறுப்பாளர்களாகிய உங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளது.

வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதே உங்களின் முதல் கடமை. போலி வாக்காளர்கள் யாரேனும் உள்ளார்களா போன்ற விபரங்களை நீங்கள் சரிபார்க்கவேண்டும். வாக்காளர்களை சந்தித்து பரப்புரை செய்யவேண்டும். நம்முடைய சாதனைகளை வாக்காளர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

உங்கள் வாக்குசாவடியில் 250 குடும்பங்கள் இருந்தால், அந்த குடும்பத்தில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் கழகத்திற்காக ஒதுக்குங்கள். கவலையின்றி மக்களை எதிர்கொள்ளுங்கள். நம்மை யாரும் நிராகரிக்க மாட்டார்கள்.

இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது மத்திய பாஜக அரசு நிறைவேற்றி இருக்கிறதா. சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. பாஜக டிசைன் டிசைனாக கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பத்திரமாக ஆவணமாக உள்ளது. மத்திய அரசு சாதனைகள் எதையும் செய்யாததால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

பாஜக தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி என்பதை நிரூபிப்போம். மத்தியில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக 3வது முறையாக ஆட்சிக்கு வராது." இவ்வாறு அவர் பேசினார்.  

 

Tags:    

மேலும் செய்திகள்