பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம்
வேலூரில் பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பா.ஜ.க. நெசவாளர் பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நடந்தது.
நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் உமாபதி, நாகுஷா, மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் சுகன்யா வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், நெசவாளர் பிரிவு மாநில பார்வையாளருமான வி.பி.துரைசாமி, மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில், தேசிய பஞ்சாலைக்கழகம் வசமுள்ள நிலத்தை நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பாவடி நிலங்களை மீட்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வேலூர் மாவட்ட தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர்கள் எஸ்.எல்.பாபு, ஜெகன்நாதன், கவுன்சிலர் சுமதி மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட பொறுப்பாளர் தங்கம் சீனிவாசன் நன்றி கூறினார்.
கூட்டத்துக்கு பின்னர் மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி கூறுகையில், 'நெசவுத்தொழிலின் மூலப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். நெய்வேலி என்.எல்.சி.க்கு நிலம் வழங்கியவர்கள் கேட்கும் கூடுதல் தொகை வழங்க வலியுறுத்தப்படும்' என்றார்.