பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடர இடைவிடாது பணியாற்றுவோம்

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடர இடைவிடாது பணியாற்றுவோம் என்று கடலூரில் நடந்த தமிழக பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-01-20 18:45 GMT

கடலூர்:

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி, கட்சி வளர்ச்சி குறித்தும், பிரதமர் நரேந்திரமோடியின் சாதனைகள் குறித்தும் விளக்கி பேசினார்.

இதில் மாநில அலுவலக செயலாளர் சந்திரன் கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.

மத்திய மந்திரி எல்.முருகன், பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் கட்சியின் அமைப்பு, எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்தும், மாநில பொருளாளர் சேகர் கட்சிக்கு நிதி சேர்ப்பது பற்றியும், மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பார்வையாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினர். முன்னதாக மாநில துணை தலைவர்கள் ராமலிங்கம், நாராயணதிருப்பதி, எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். இதில் தீர்மானக்குழு உறுப்பினர்கள் சசிகலா புஷ்பா, வி.பி.துரைசாமி, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகை நமீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

மீண்டும் பா.ஜ.க. ஆட்சி

பா.ஜ.க. தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, அவரது வழிகாட்டுதலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி வாகை சூடி, மீண்டும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி தொடர இடைவிடாது பணியாற்றுவது,

எதிர்காலத்தில் உலக பிரச்சினைகள் தீர்க்கப்படும் நாடாக நம் பாரததேசத்தை உருவாக்கி நமக்கு பெருமை சேர்த்த ஜி20 கூட்டமைப்பு தலைவர் நரேந்திரமோடியை பாராட்டுவது,

தமிழக சட்டசபையில் கவர்னர் உரையின் போது, ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழகம்- தமிழ்நாடு என்ற தேவையற்ற சர்ச்சையை கிளப்பி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாடகமாடி வருகிறது. மேலும் தமிழக கவர்னரை ஒருமையில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சேது கால்வாய் திட்டம்

ராமர் பாலத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராம பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வேண்டும். தமிழக விவசாயிகளையும், நெசவாளர்களையும் வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டிப்பது, தி.மு.க. ஊழல்கள் குறித்து அனைத்து ஒன்றிய, நகர, மண்டல பகுதிகளில் பிரசார நிகழ்ச்சிகளை நடத்துவது என்பன உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பா.ஜ.க. உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் பாரதிசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டும் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்