அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பா.ஜனதாவினர் சாலை மறியல்

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-11 18:45 GMT

சுசீந்திரம்:

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பா.ஜனதாவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சர் பதவி விலகக்கோரி

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரியும் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் குமரி மாவட்ட பா.ஜனதா சார்பில் சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று காலை 10 மணி முதல் பா.ஜனதாவினர் சுசீந்திரத்தில் குவிய தொடங்கினர்.

பா.ஜனதாவினர் மறியல்

ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும் அங்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. எனவே போக்குவரத்தை சீரமைக்க புறவழிச்சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

1 மணி நேரமாக மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

353 பேர் கைது

சாலை மறியலின் போது 2 தடவை ஆம்புலன்ஸ் வந்தது. உடனே அந்த ஆம்புலன்சுக்கு பா.ஜ.க.வினர் வழிவிட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டதாக மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் டி.அய்யப்பன், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் டி.சதீஷ், டி.வீரசூரபெருமாள், தர்மபுரம் ஊராட்சி பா.ஜ.க. தலைவர் த.ஸ்ரீசெல்வன் உள்பட 353 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 84 பெண்கள் அடங்குவர். கைதான அனைவரையும் சுசீந்திரம் அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்