பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பாதயாத்திரைதமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: தொல்.திருமாவளவன் பேட்டி

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-15 18:45 GMT

பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணத்தால் தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

நெல்லை மாவட்டத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

தாக்கம்

இந்தியா கூட்டணியை கண்டு பா.ஜனதா பயந்து உள்ளது. அனைத்து எதிர் கட்சிகளும் ஓரணியில் திரண்டு இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்தது காலத்தின் தேவையாக மாறி இருக்கிறது. இந்த கூட்டணி உருவானது முதல் பிரதமர் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நாட்கள் என்னப்பட்டு கொண்டிருக்கிறது.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஊடகத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக் கொண்டு இருக்கிறார். அவருடைய அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர் தன்னைப் பற்றிய ஊடகம் அல்லது சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார். இது தவிர, அவரது நடைபயணத்தால் வேறு எந்த தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது.

தலைகுனிவு

நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒருவரை ஒவ்வொருவரையும் தலைகுனிய வைக்க கூடிய ஒரு சம்பவமாக இது அமைந்திருக்கிறது. பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களை சாதிய, மதவாதிகளாக மாற்றும் கருத்துக்களை பரப்பும் அமைப்புகளை கண்காணிக்க வேண்டியதும், அவர்களை கட்டுப்படுத்த வேண்டியதும், தமிழக அரசின் பொறுப்பு. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள ஆணையம், நாங்குநேரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் நிலவும் இது போன்ற பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அரசுக்கு உரிய வழிகாட்டுதல்களை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்