பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இருமுடி கட்டி சபரிமலை பயணம்
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
கோவை,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும்.
அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. விரதம் இருந்து மாலை அணிந்து இன்று காலை வட கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். அவருடன் சிறுவர், சிறுமியர் உள்பட 10 பேர் சபரிமலை யாத்திரைக்குச் சென்றுள்ளனர்.