வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பா.ஜனதா பிரமுகர்
நெல்லையில் பா.ஜனதா கட்சி பிரமுகர் ஒருவர் வாளால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் பகுதியை சேர்ந்தவர் உடையார் (வயது 30). பா.ஜனதா கட்சி பிரமுகரான இவர் வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். உடையார் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருடைய ஆதரவாளர்கள், உடையாருக்கு ஆள் உயர ரோஜா பூ மாலை அணிவித்தனர். பின்னர் கிரீடமும் அணிவித்து வீர வாள் வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்தனர். அப்போது வீர வாள் கொண்டு கேக் வெட்டி உடையார் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். பின்னர் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.