நாட்டில் அடித்தட்டு மக்களை நசுக்குகிற வேலையை செய்கிறது பா.ஜ.க.விழுப்புரம் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
நாட்டில் அடித்தட்டு மக்களை நசுக்குகிற வேலையை செய்கிறது பா.ஜ.க. என்று விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பட்டியலின- பழங்குடி மக்கள் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு மாநாடு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு பொருளாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். வரவேற்புக்குழு தலைவர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
இம்மாநாட்டில் , உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, அய்யாவழி சமய தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார், துரை.ரவிக்குமார் எம்.பி., ம.தி.மு.க. அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், தி.க. பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.
சிவப்புக்கொடி உயர வேண்டும்
மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:-
மனிதன் இரண்டு கால்களில் நடக்க வேண்டும், பொருளாதார விடுதலை, மற்றொன்று சமூக விடுதலைக்கான ஒன்றாக வேண்டும். தலித் மக்களுக்கு எதிராக எங்கெல்லாம் அநீதி நடக்கிறதோ அங்கெல்லாம் சிவப்புக்கொடி உயர வேண்டும்.
அதனால்தான் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறோம்.
ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு, ஒரு மதிப்பு இருக்கிறது. அந்த மதிப்பு இன்றைக்கு மனிதர்களுக்கு இருக்கிறதா என்பது இல்லை. சமூகநீதிக்காக பல தலைவர்கள் போராடினார்கள். ஆனால் 75 ஆண்டுகளுக்கு பிறகும் சமூகநீதி கிடைக்கவில்லை.
உத்தரபிரதேசம் போன்ற மாநிலத்தில் தலித் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
ஆணவப்படுகொலை அதிகரிப்பு
இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பா.ஜ.க. ஆட்சியில் அடித்தட்டு மக்களை நசுக்குகிற வேலையை செய்கிறது. வர்னாஸ்மித்திரத்தை கொண்டு வரும் செயலில்தான் பா.ஜ.க. செயல்படுகிறது. பாசிச இந்துத்துவா கொள்கை கோட்பாடு உயர்ந்து கொண்டிருக்கிறது. அதை மேலும் உயர்த்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. சாதிய ஆணவப்படுகொலை அதிகரித்து கொண்டிருக்கிறது. கையால் மலம் அள்ளும் நிலை நாட்டில் பல இடங்களில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தலித்துகளுக்கு எதிராக பல இன்னல்கள் பா.ஜ.க. அரசில் நிகழ்கிறது. இந்தியாவிலேயே சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் நிலைமை மாறவில்லை. இதுபோன்ற மக்களுக்கு பொருளாதார ரீதியாக அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே மாற்றம் செய்யப்படும். மோடி அரசாங்கம், தலித், முஸ்லிம் மாணவர்களுக்கு வெளிநாடு சென்று கல்வி பயில்வதற்கான உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவின் வளங்களை கொள்ளையடித்து கொண்டிருக்கிற பா.ஜ.க. அரசை வீழ்த்த வேண்டும்.
ஒன்றிணைந்து போராடும் நிலை
தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினேன். அப்போது மதசார்பற்ற அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டுமென கூறினேன். கர்நாடக தேர்தலில் அப்பகுதி மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள்.
ஒளிமயமான இந்தியாவை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பெண்களுக்கு எதிராகவும், தலித் மக்களுக்கும், கலப்பு திருமணங்களுக்கு எதிராக உள்ள பா.ஜ.க. பின்னோக்கிய இருளை கொண்டு வருகிற செயலில் ஈடுபடுவதால் அதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை உள்ளது. சமூகநீதி போராட்டத்தினை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தமிழ்நாடு அதற்கு உதாரணமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட்டுகட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், தி.மு.க. மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம், ஆதித்தமிழர் கட்சி நிறுவனர் ஜக்கையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், அரகண்டநல்லூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.வாசிம்ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் விழுப்புரம் பகுதி செயலாளர் கண்ணப்பன் நன்றி கூறினார். முன்னதாக இம்மாநாட்டில் ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.