பா.ஜ.க. பிரமுகர் வீடு மீது தாக்குதல்; பேரன் காயம்
பா.ஜ.க. பிரமுகர் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பேரன் காயமடைந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையை சேர்ந்தவர் தடா பெரியசாமி(வயது 60). இவர் பா.ஜ.க.வில் பட்டியல் அணி மாநில தலைவராக உள்ளார். நேற்று இரவு இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்த ஒரு கும்பல், அங்கு நின்ற காரை சேதப்படுத்தியது. மேலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தது. இந்த தாக்குதலில் தடா பெரியசாமியின் 3 வயது பேரனுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதைத்தொடர்ந்து தடா பெரியசாமியின் பேரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் பற்றி அறிந்த பா.ஜ.க.வினர் தடா பெரியசாமியின் வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது அவர்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.