பா.ஜ.க. நிர்வாகியை கொன்றதாக கைது செய்து சிறையில் அடைப்பு: பாதிக்கப்பட்ட 2 பேருக்கு இழப்பீடு வழங்க ரூ.18 லட்சத்தை இன்ஸ்பெக்டரிடம் வசூலிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பா.ஜ.க. நிர்வாகியை கொன்றதாக கைது செய்து சிறையில் அடைத்ததால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு இழப்பீடு வழங்க போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ரூ.18 லட்சத்தை வசூலிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பா.ஜ.க. நிர்வாகியை கொன்றதாக கைது செய்து சிறையில் அடைத்ததால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு இழப்பீடு வழங்க போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ரூ.18 லட்சத்தை வசூலிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கொலை வழக்கில் சிறையில் அடைப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது, மனோகரன் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த தனித்தனி மனுக்களில் கூறியிருந்ததாவது:-
நாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தோம். இந்தநிலையில் பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் முருகன் என்ற முருகேசன், கடந்த 19.3.2013 அன்று வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் வழக்குப்பதிவு செய்து, எங்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார். எங்கள் மீதும் தேசிய பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
உண்மையான குற்றவாளிகள்
அதன்பேரில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகள் பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், முகமது இஸ்மாயில் என்ற பன்னா இஸ்மாயில் ஆகியோர்தான் என்று கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். எங்களை விடுவித்தனர்.
கொலை வழக்கில் எங்களை சிறையில் அடைத்ததால், நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு உள்ளோம். ராஜா முகமதுவின் மனைவி தனது ஆசிரியை வேலையை ராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அவரது மகளின் திருமணம் நின்றுபோனது.
இழப்பீடு வழங்குங்கள்
இதேபோல மனோகரனின் குடும்பமும் பல்வேறு துன்பங்களை சந்தித்தது. இதனால் சொந்த ஊரில் இருந்து வேறு இடத்திற்கு குடும்பத்துடன் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இதற்கு காரணமான இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். எங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதி புகழேந்தி விசாரித்தார்.
அப்போது மனுதாரர் வக்கீல்கள் ஆனந்த், ஒலி முகமது ஆகியோர் ஆஜராகி, போலீஸ் இன்ஸ்பெக்டரின் தவறான நடவடிக்கையால் மனுதாரர்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, சமூகத்தில் அவமானப்படுத்தப்பட்டனர். எனவே போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதாடினர்.
அரசு தரப்பில், இன்ஸ்பெக்டரின் தவறான நடவடிக்கைக்காக அவருக்கு 2 ஆண்டுகள் சம்பள உயர்வு நிறுத்தி வைத்து தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டரிடம் வசூலிக்க உத்தரவு
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
வேலூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட சிலர் கைதானார்கள். அவர்களின் வாக்குமூலத்தில் பரமக்குடி முருகேசனை நாங்கள்தான் கொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் மனுதாரர்கள் ராஜா முகமது, மனோகரன் ஆகியோருக்கும் இறந்தவரின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து கிரையம் செய்வதில் முன்விரோதம் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மனுதாரர்கள் இந்த கொலையை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். அதனால் கிரிமினல் வழக்கில் தவறான நடவடிக்கைக்கு ஆளானதற்காகவும், அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்காகவும் மனுதாரர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த கோர்ட்டு கருதுகிறது.
அதன்படி மனுதாரர் ராஜாமுகமதுவுக்கு ரூ.10 லட்சத்தையும், மற்றொரு மனுதாரர் மனோகரனுக்கு ரூ.8 லட்சத்தையும் இழப்பீட்டு தொகையாக 16 வாரத்தில் அரசு செலுத்த வேண்டும். இந்த தொகையை தற்போது தர்மபுரி மாவட்டத்தில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரத்னகுமாரிடம் இருந்து வசூலித்து கொள்ளலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.