பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து குமரியில் அமித்ஷா வாகன பேரணி

தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று குமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார்.

Update: 2024-04-13 07:25 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். குமரி மாவட்டத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக நந்தினி களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கூட்டணி தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று குமரி மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் காலை 9 மணிக்கு வந்தார்.

இதனை தொடர்ந்து மேட்டுக்கடையில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை திருவனந்தபுரம் சாலையில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு நடைபெறும் வாகன பேரணியில் அமித்ஷா கலந்து கொண்டு திறந்த வாகனத்தில் நின்றவாறு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பேரணி முடிவடையும் இடமான பழைய பஸ் நிலைய பகுதியான இரணியல் பிரிவு ரோடு சந்திப்பில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார்.

அமித்ஷா வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன பேரணியின் போது சாலையில் அமித்ஷாவை வரவேற்பதற்காக சாலையின் இருபுறமும் பா.ஜ.க.வை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்