மலைப்பாதையில் சுற்றித்திரிந்த காட்டெருமை

சிறுமலை மலைப்பாதையில் சுற்றித்திரிந்த காட்டெருமை பார்த்து சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2023-07-02 19:45 GMT

திண்டுக்கல் அருகே மலைகளின் அரவணைப்பில் சிறுமலை அமைந்துள்ளது. 'குட்டி கொடைக்கானல்' என்று அழைக்கப்படும் இந்த சிறுமலைக்கு திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி, திருச்சி, கரூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சிறுமலை பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. சமீபகாலமாக காட்டெருமை, காட்டுப்பன்றி ஆகியவை சர்வ சாதாரணமாக ஊருக்குள் சுற்றித்திரிகின்றன.

அப்போது அவை பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றன. இந்தநிலையில் நேற்று வார இறுதி விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுமலைக்கு படையெடுத்து வந்தனர். அப்போது சிறுமலைக்கு செல்லும் மலைப்பாதையில் 14-வது கொண்டை ஊசி வளைவு அருகில் காட்டெருமை ஒன்று சாலையில் குறுக்கும், நெடுக்குமாக சுற்றித்திரிந்தது. சுமார் அரை மணி நேரமாக காட்டெருமை அப்பகுதியிலேயே முகாமிட்டது. அப்போது அங்கு வந்த சுற்றுலா பயணிகளை அது அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் காட்டெருமையை புகைப்படம் எடுத்தனர். சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் காட்டெருமைக்கு மிக அருகில் நின்றபடி செல்போனில் 'செல்பி' எடுத்தனர். இதனை பார்த்த கிராம மக்கள், அந்த இளைஞர்களை எச்சரித்து, ஒதுங்கி போக கூறினர். பின்னர் அந்த காட்டெருமை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்