கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி; புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
செங்கோட்டை:
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரவியதால் கோழிகள் செத்தன. மேலும் ஆலப்புழா மாவட்டத்தில் 1,500 வாத்துகள் இறந்தன. இதன் எதிரொலியாக, தமிழக அரசு மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருகிற வாகனங்கள் மூலம் கிருமிகள் பரவாமல் தடுக்க அந்த வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
ெநல்லை மாநகர பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சிவ.கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி நேற்று தூய்மை பணியாளர்கள் இறைச்சி கோழி கடைகள், கோழிப்பண்ணை பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர். வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதேபோல் புறநகர் மாவட்டத்திலும் இறைச்சி கோழி கடைகள், பண்ணை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக-கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனை சாவடியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்பேரில் நெல்லை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பொன்வேல் தலைமையில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. முகாமில் புளியரை கால்நடை டாக்டர் ஜெயபால்ராஜா மற்றும் கால்நடை ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர், கிருமிநாசினி தெளிப்பாளர்கள் 2 பேர் ஆகியோர் பணியில் இருக்கிறார்கள். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்கிறார்கள்.
கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி தெளித்த பிறகே உள்ளே வர அனுமதிக்கின்றனர். மேலும் அங்கிருந்து தமிழகத்துக்கு வாத்து, கோழி, முட்டை, கோழி இறைச்சி, கோழி தீவனங்கள், கோழி கழிவுகள் போன்றவற்றை கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவற்றை ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.