தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை

விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால் தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை என்று கோவையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Update: 2023-06-09 19:30 GMT

கோவை

விதிமுறைகள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பதால் தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை என்று கோவையில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி

கோவை, திருப்பூர், ஈரோடு, ஊட்டி ஆகிய மண்டலங்களில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள், விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகள் என மொத்தம் 518 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்பட ரூ.145 கோடியே 58 லட்சத்தில் பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமையக வளாகத்தில் நடந்தது.

கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார். மேயர் கல்பனா முன்னிலை வகித்தார். கோவை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் திருவம்பலம்பிள்ளை வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு 518 பேருக்கு பணப்பலன்களை வழங்கி பேசினார்கள்.

பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டிரைவர்-கண்டக்டர் நியமனம்

கடந்த ஆட்சியின்போது போக்குவரத்து துறையில் புதிதாக டிரைவர், கண்டக்டர் நியமிக்கப்படவில்லை. ஆனால் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் போக்குவரத்துத்துறைக்கு கூடுதலாக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன்படி புதிதாக டிரைவர்-கண்டக்டரை பணியில் அமர்த்த உத்தரவிட்டு உள்ளார்.

முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் புதிதாக டிரைவர், கண்டக்டரை நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. விரைவில் மற்ற அரசு போக்குவரத்து கழகங்களிலும் புதிதாக டிரைவர்-கண்டக்டர் நியமிக்கப்படுவார்கள்.

புதிய பஸ்கள்

அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பஸ்களை பராமரிக்க வழக்கம்போல நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அதில் எவ்வித குறையும் இல்லை. கூடுதலாக நிதி தேவை இருந்தால் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிதி பெறப்படும்.

மேலும் போக்குவரத்து கழகத்துக்கு கூடுதலாக 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. உலக வங்கியின் நிதியுதவியுடன் 2,400 பஸ்கள் வாங்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. 6 மாதத்துக்குள் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும்.

பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் பைக், வாடகை வாகனமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே பைக் டாக்சியை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. பொதுவாக வாடகை வாகனங்கள் என்றால் அதற்கு தனியாக அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் வாடகை வாகனங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பைக் என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதை எப்படி வாடகைக்கு அனுமதிக்க முடியும். அவ்வாறு அனுமதிக்க விதிகள் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே தமிழக அரசை பொறுத்தவரை பைக்கை வாடகைக்கு விடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை

அரசு பஸ்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. சென்னையில் அதை அமல்படுத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அங்கு கொண்டு வந்த பின்னர், மற்ற பகுதிகளுக்கும் சோதனை அடிப்படையில் கொண்டு வரப்படும். அதன் பின்னர் முழுமையாக அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர்கள் 2 பேரும் கோவை மண்டலத்தில் உள்ள தலைமையகத்தில் டிரைவர்-கண்டக்டருக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறையை திறந்து வைத்தனர். தொடர்ந்து புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பு மூலம் பஸ் நிறுத்த அறிவிப்பு திட்டத்தையும் தொடங்கி வைத்தனர்.

பஸ்சில் சென்று ஆய்வு

அதை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக தலைமையகத்தில் இருந்து சிவானந்தாகாலனி வரை அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சிவசங்கர் ஆகியோர் அரசு டவுன் பஸ்சில் சென்று அந்த தானியங்கி அறிவிப்பு சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ஏ.பி.நாகராஜ், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஸ்ரீதரன், தலைமை நிதி அதிகாரி கண்ணன் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்