காவலாளியை கொன்ற பீகார் வாலிபர் கைது

Update: 2023-02-10 19:30 GMT

சேலத்தில் காவலாளியை கொன்ற பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

காவலாளி கொலை

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கையன் (வயது 58). இவர் லீ பஜார் பகுதியில் உள்ள ஒரு பருப்பு மில்லில் கடந்த 4 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கையன் பருப்பு மில்லில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா, உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் ராணி மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் நடந்த அன்று இரவு சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

பீகார் வாலிபர்

இதற்கிடையில் பருப்பு மில்லில் ரூ.25 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இதனால் அந்த வாலிபர் தான் காவலாளி தங்கையனை கொலை செய்துவிட்டு பணத்தை திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதனால் சைக்கிளில் வந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரித்த போது, அவர் பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த அமர்ஜித்குமார் என்கிற சோனுகுமார் (19) என்பது தெரியவந்தது.

இதையடுத்து உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் கொண்ட தனிப்படையினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் ரெயில் மூலம் தனது சொந்த ஊரான பீகாருக்கு தப்பி செல்வதற்காக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்த சோனுகுமாரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

கைது

பின்னர் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் காவலாளி தங்கையனை கொன்று அங்கிருந்த ரூ.25 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

சோனுகுமார் கடந்த சில ஆண்டுகளாக சேலத்தில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 7-ந் தேதி சோனுகுமார் பருப்பு மில்லில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அன்று மாலை அதற்கான கூலி வாங்கி சென்றவர் மறுநாள் வேலைக்கு வரவில்லை. பருப்பு மில்லில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததை நோட்டமிட்ட சோனுகுமார் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் 8-ந் தேதி இரவு சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது அவரை பார்த்த காவலாளி தங்கையன் இங்கு ஏன் வந்தாய்? என்று கேட்டதுடன் இது குறித்து பருப்பு மில் உரிமையாளருக்கு தகவல் தெரிவிப்பதற்காக செல்போனை எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சோனுகுமார் காவலாளியை அங்கிருந்த கட்டையை எடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த தங்கையன் அங்கேயே இறந்து போனார். அதைத்தொடர்ந்து சோனுகுமார் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

செல்போன் பறிப்பு

பின்னர் பள்ளப்பட்டி பகுதியில் கொலையாளி சோனுகுமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பருப்பு மில் மேலாளர் கோபாலகிருஷ்ணன் வந்துள்ளார். அவர் சோனுகுமாரை பார்த்ததும் அருகில் சென்று நீ தானே காவலாளி தங்கையனை கொலை செய்தது என்று கூறி அவரை பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கத்தியை காட்டி மிரட்டி கோபாலகிருஷ்ணன் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பினார். இதனிடையே ரெயில் மூலம் சொந்த ஊருக்கு தப்பி செல்ல முயன்ற அவரை பிடித்து கைது செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.காவலாளி கொலை வழக்கில் கொலையாளியை விரைவில் பிடித்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்