ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

Update: 2023-01-07 17:04 GMT


ஒன்பதாறு சோதனைச்சாவடியில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, காட்டுப்பன்றிஉள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி, குன்னூர், உதகை, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு வார காலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தாக்கி உள்ளது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:-

தமிழக கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்து வளர்ப்புக்காகவோ இறைச்சிக்காகவோ பன்றிகள் கொண்டு வரவும் இங்கிருந்து கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடுக்கும் பணி தீவிரம்ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்

மேலும் பண்ணைகளை தீவிர நோய் கண்காணிப்புக்கு உட்படுத்தவும் கால்நடை உதவி டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை உள்ளடக்கிய வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் இறந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவிப்பதுடன் அதனை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் இறந்து உள்ளதா என்பதை வனத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

இந்த காய்ச்சல் ஒரு வித வைரஸ் கிருமியினால் ஏற்படுகிறது. மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு பரவும் தன்மை இல்லை. எனினும் பன்றிகள் மூலம் அதிகம் பரவி உயிர் இழப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ளதால் காட்டுப்பன்றிகள் மட்டுமில்லாமல் வளர்ப்பு பன்றிகளும் இறப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் நோய் பரவலை தடுக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

பன்றிகள் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் பண்ணைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.வெளி நபர்களை பண்ணைக்குள் அனுமதிக்க கூடாது. உணவக கழிவுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்