ரூ.5 கோடி செலவில் உலமாக்களுக்கு சைக்கிள்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், 5 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு வழங்கும் விதமாக, 3 உலமாக்களுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
மேலும், 2022-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ் பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத் தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.27,628- வீதம், மொத்தம் 4.56 கோடி ரூபாய் வழங்கும் விதமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகமது நசிமுத்தின், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சிறுபான்மையினர் நல இயக்குனர் சுரேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.