பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது; ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்க வாய்ப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால், பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Update: 2022-07-21 21:39 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால், பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

100 அடியை...

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரி தண்ணீர் திறப்பதாலும் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 349 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 99.05 அடியாக இருந்தது.

நேற்று மாலை 3 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 849 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 99.19 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீா் திறக்கப்பட்டு உள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டு விடும் நிலையில் உள்ளதால், பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரை பவானி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு சென்று விட்டார்கள் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்