பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் கடந்த 5-ம் தேதி 102 அடியை எட்டியது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக வினாடிக்கு 25 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி முன்கூட்டியே கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
வரத்து குறைந்தது
நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் வந்தது.
நேற்று மாலை 4 மணியளவில் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரத்து 300 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை பாசன பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு உபரி நீராகவும் மொத்தம் வினாடிக்கு 8 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.