பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-06-11 14:55 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரி, 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

தேரோட்டம்

9-ம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி வெள்ளிப் பல்லக்கில் உற்சவரை அலங்கரித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. தேரில் அம்மனை எழுந்தருள செய்து சிறப்பு வழிபாடு, பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த தேர் தேரோடும் வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்தது.

திரளான பக்தர்கள்

இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம்.பி., அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, தாமரை தினேஷ், பா.ஜனதவை சேர்ந்த சுபாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் சிவகுமார், கோவில் கணக்காளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழாவும், 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

பா.ஜனதாவினர் வாக்குவாதம்

திருவிழாவின் போது அம்மனின் அபிஷேகத்திற்கு புனித நீரை விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து யானை மீது வைத்து மேளதாளம் முழங்க பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வைகாசி விசாக திருவிழாவின் போது புனிதநீரை கொண்டு வர யானை பயன்படுத்தப்படவில்லை.

தேரோட்ட நிகழ்ச்சிக்கும் இதே நிலை நீடித்ததால் பா.ஜனதாவை சேர்ந்த சிலர் அமைச்சர்கள் முன்னிலையில் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அவர்களை சாமதானப்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்