தீமிதித்த பக்தர்களை சாட்டையால் அடித்த பாகவதர்

குத்தாலம் அருகே வில்லியநல்லூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீமிதித்த பக்தர்களை பாகவதர், சாட்டையால் அடித்தார்.

Update: 2023-06-13 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே வில்லியநல்லூர் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் தீமிதித்த பக்தர்களை பாகவதர், சாட்டையால் அடித்தார்.

தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதனையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் காவிரி கரையில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

சாட்டையால் அடித்தார்

அங்கு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 16 அடி அலகு குத்தி தீமிதித்த காட்சிகள் பக்தர்களை பரவசமடைய செய்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய திரவுபதி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் தீ மிதித்த பக்தர்களுக்கு சாட்டை அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாட்டை, அம்பாளுடன் பிறந்ததால் அதனைக் கொண்டு தீ மிதித்த பக்தர்களை அடிக்கும்போது தீவினைகள் மற்றும் பில்லி, சூனியம் உள்ளிட்டவை விலகிப் போகும் என்பது ஐதீகம். இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் பாகவதரிடம் சாட்டையடி பெற்று அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்