தூத்துக்குடி-நெல்லை இடையே மெமு ரெயில் இயக்க கோரிக்கை

தூத்துக்குடி-நெல்லை இடையே மெமு ரெயில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-25 18:45 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி-நெல்லை இடையே மெமு ரெயில் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி தொழில் நகரமாக வளர்ந்து உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் ஏராளமானவர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.

ரெயில்கள் நிறுத்தம்

தூத்துக்குடி கீழுர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, மைசூருக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி வரை உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு ரெயில் சேவை வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது. அங்கு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ரெயில்களில் சீசன் டிக்கெட் பெற்று தூத்துக்குடி, நெல்லைக்கு சென்று படித்து வந்தனர். கொரோனா காலத்தில் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் படிப்படியாக ரெயில்கள் இயக்கப்பட்டாலும் பயணிகளுக்கு சாதகமான சூழல் அமையவில்லை என்ற கருத்தே நிலவி வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பயன் தராத நேரத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டானில் மெமு ரெயில்கள் பராமரிப்பு மையம் அமைத்து, தூத்துக்குடி-நெல்லை இடையே மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரெயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து உள்ளது.

மாணவர்களுக்கு சிரமம்

இதுகுறித்து மணியாச்சியை சேர்ந்த மாணவர் விஜயகுமார் கூறும்போது, 'எங்கள் பகுதிக்கு பஸ் போக்குவரத்து குறைவாக உள்ளது. இதனால் ரெயில் சேவை எங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். எங்கள் பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த ரெயிலை பயன்படுத்தி வந்தோம். நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு மாலையில் இயக்கப்படும் ரெயில் நீண்ட நேரம் மணியாச்சியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு பிறகே அந்த ரெயில் தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் இந்த ரெயிலை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

கொரோனாவுக்கு முன்பு இயங்கியது போன்று மாலை 5 மணிக்கே அந்த ரெயிலை இயக்க வேண்டும். அதேபோன்று தூத்துக்குடியில் இருந்து காலை 7.50 மணிக்கு குருவாயூர் ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் நிறுத்தப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக 8.30 மணிக்கு வழக்கமான பயணிகள் ரெயிலே இயக்கப்பட்டு வருகிறது. இதில் செல்லும்போது குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. ஆகையால் இந்த ரெயிலை மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி முன்கூட்டியே இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மெமு ரெயில்

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தை சேர்ந்த பிரமநாயகம் கூறும்போது, 'நெல்லை-தூத்துக்குடி இடையே தினமும் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் பஸ்களில் பயணித்து வருகின்றனர். இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தூத்துக்குடி-நெல்லை இடையே ரெயில் பயணம் அதிக நேரமாவதால் மக்கள் அதனை விரும்புவது இல்லை. இதனால் தூத்துக்குடி-நெல்லை இடையே மின்மயமாக்கும் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளன. ஆகையால் மெமு ரெயில்களை இயக்கி பயண நேரத்தை குறைக்க வேண்டும். இந்த மெமு ரெயிலை மணியாச்சி பைபாஸ் வழியாக இயக்கினால் பயண நேரம் வெகுவாக குறையும்.

மதுரை கோட்டத்தில் மெமு பராமரிப்பு மையம் இதுவரை அமைக்கப்படவில்லை. அதனை தூத்துக்குடி மீளவிட்டானில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அதேபோன்று ரெயில் நிலையத்துக்கு வரும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தின் முன்பு பழைய ரெயில் தண்டவாளம் இருந்த இடத்தில் சாலை அமைக்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்ல முடியும். இந்த பணிகளை விரைந்து செயல்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்