மாவட்டத்தை சேர்ந்தஅரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 6 பேர் வெளிநாடு சுற்றுலாவுக்கு தேர்வு
மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 6 பேர் வெளிநாடு சுற்றுலாவுக்கு தேர்வு செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்ட அளவில் அரசு பள்ளிக்கூட மாணவ -மாணவிகளுக்கு கலைத்திருவிழா, இலக்கிய மன்ற போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ-மாணவிகள், சுற்றுலாவுக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட உள்ளனர். அதன்படி ஈரோடு மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நகுல், அ.பள்ளிபாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனுஜா ஆகியோர் இலக்கிய மன்றம் சார்பில் தேர்வாகி உள்ளனர்.
மேலும் ஈரோடு காசிபாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஸ்ரீசாந்த் விளையாட்டு பிரிவு சார்பிலும், பொன்னாத்தா வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி சிந்துஜா, ஊசிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் அய்யப்பன் ஆகியோர் கலை மற்றும் கலாசார பிரிவு சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன் சையது இப்ராஹிம், வானவில் மன்றம் சார்பிலும் தேர்வாகி உள்ளார். இவர்கள் அனைவரும் தமிழக அரசு சார்பில் வெளிநாடு செல்ல உள்ளனர். இதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. எந்த நாட்டுக்கு எத்தனை நாட்கள் செல்ல உள்ளனர் என்ற விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.