கடலூர் பணிமனை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூர் பணிமனை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
2020-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு மரணமடைந்த, பணி ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். இரட்டிப்பு பணி பார்த்தால் தான் விடுப்பு என்று நிர்வாகம் மிரட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு.) கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். நிர்வாகி முருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சிறப்பு தலைவர் பாஸ்கரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் துணை தலைவர் ஜான்விக்டர், நிர்வாகிகள் முத்துக்குமரன, கண்ணன், நடராஜன், ஓய்வுபெற்ற சங்கத்தை சேர்ந்த பழனிவேல், பூங்குன்றம், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.