கலெக்டர் அலுவலகம் முன்புஇந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்
இந்திய மாணவர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய மாணவர் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வேல்பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேகுவேரா, சந்தரவதனா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகெண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அடிப்படை வசதிகள், பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான 2022-23-ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால், மாநிலம் முழுவதும் இதுவரை 68 ஆயிரத்து 413 பேர் தான் விண்ணப்பித்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க 27 வகையான ஆவணங்கள் கேட்கப்படுகிறது. எனவே, இந்த விண்ணப்பிக்க கால அவகாசத்தை அதிகரிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.