கயத்தாறு அருகே வாலிபரை போலீசார் பிடித்து சென்றதால் சாலைமறியல்-கல்வீச்சு
கயத்தாறு அருகே வாலிபரை போலீசார் பிடித்து சென்றதால் சாலைமறியல்-கல்வீச்சு நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே அழகுமுத்துக்கோன் நினைவு வளைவில் சமுதாய கொடியேற்றிய வாலிபரை போலீசார் பிடித்து சென்றதை கண்டித்து சாலை மறியல் நடந்தது. அப்போது கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த கட்டாலங்குளத்தில் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் சென்றனர். மேலும் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சாலை மறியல்
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மரியாதை செலுத்த சிலர் புறப்பட்டனர். அவர்கள் நேற்று மதியம் நெல்லை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அழகுமுத்துக்கோன் நினைவு வளைவு பகுதிக்கு வந்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் அங்குள்ள நினைவு வளைவு மீது ஏறி சமுதாய கொடியை ஏற்றினார். இதற்கு அங்கு வந்த மற்ற சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனை கண்டித்து அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீஸ் தடியடி
தொடர்ந்து அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதன் காரணமாக அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். மேலும் சிலர் போலீசார் மீது கற்களை வீசினார்கள். இந்த சம்பவங்களில் சிலர் காயம் அடைந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன், நெல்லை சூப்பிரண்டு சிலம்பரசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கயத்தாறு அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.