திருவையாறு அருகே அழகுக்கலை பெண் நிபுணர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகுக்கலை பெண் நிபுணர்
தஞ்சையை அடுத்த திருவையாறு மணக்கரம்பை வி.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கவுரிபாலா(வயது 28), அபிராமி(23) ஆகிய 2 மகள்கள்.
கருத்து வேறுபாடு காரணமாக பாலகிருஷ்ணன், மனைவியை பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தஞ்சையில் தனியாக வசித்து வருகிறார்.
கவுரிபாலா, சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். பியூட்டீசியனாக பணிபுரிந்து வந்த அபிராமி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வேலை சம்பந்தமாக சென்னைக்கு சென்றுவிட்டு நேற்று வீட்டிற்கு வந்தார்.
ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்
நேற்று காலை 11 மணி அளவில் வீட்டில் அபிராமி கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் செல்விக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அபிராமி கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
கைரேகை நிபுணர்கள்
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து அந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் 'சோழா' வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
பல்வேறு கோணங்களில் விசாரணை
அபிராமி உடலை கைப்பற்றிய போலீசார் திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசில் செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழகுக்கலை பெண் நிபுணர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.